தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க குற்றச்சாட்டுக்கு நடிகர் விஷால் விளக்கம்!
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க குற்றச்சாட்டுக்கு நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் நிதி பொறுப்பற்ற முறையில் கையாளப்பட்டதாக விஷால் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.
இதனை விசாரிக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விஷால் தலைவராக இருந்தபோது சங்கத்திற்கு ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்த குற்றச்சாட்டிற்கு விஷால் பதிலளிக்காத நிலையில், விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.
அதன்படி, விஷாலை வைத்து படம் எடுக்கும் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கலந்து ஆலோசித்தப் பிறகே பட வேலைகளை தொடங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டுக்கு நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வைப்பு நிதியானது செயற்குழு, நிர்வாகக் குழுக்களின் அனுமதி பெற்றே சங்க உறுப்பினர்களின் மருத்துவக் காப்பீடு மற்றும் பென்சன் ஆகியவற்றிக்கு பயன்படுத்தப்பட்டது; வைப்புத் தொகையை பயன்படுத்தலாம் என செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்ட பிறகே நலத் திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டது” இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.