கதாநாயகனாக களமிறங்கும் கூல் சுரேஷ்... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் சந்தானம்...!
நடிகர் கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் 'உள்ளே செல்லாதீர்கள் 'என்கிற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சந்தானம் இன்று தனது அலுவலகத்தில் வெளியிட்டார். மேலும் அவர் படக்குழுவினரையும் வாழ்த்தினார். ரெட் ப்ளூ ஸ்டுடியோஸ் சார்பில் ஜி. முத்துமனோகரன் தயாரிப்பில் இப்படத்தை இளையராஜா .சி. இயக்குகிறார்.

நிகழ்ச்சியின் போது பேசிய கூல் சுரேஷ், "இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை எப்படி வெளியிடுவது என்று சஸ்பென்சாக வைத்திருந்தேன். இப்போதுதான் அந்த சஸ்பென்ஸ் உடைந்துள்ளது. என் மீது எவ்வளவு குற்றம் குறைகள் இருந்தாலும் எனது தாய் தந்தைக்குப் பிறகு என் மீது அன்பும், நான் வளர வேண்டும் என்கிற நல்லெண்ணமும் கொண்டவர் நண்பர் சந்தானம். அப்படிப்பட்ட சந்தானத்தின் பொற்கரங்களால் நான் கதாநாயகனாக நடித்துள்ள 'உள்ளே செல்லாதீர்கள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பேசிய நடிகர் சந்தானம், "கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை பற்றி கேள்விப்படும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அவர் கதாநாயகனாக நடித்துள்ள மூன்றாவது படம். பேய்க் கதைகளைப் படமாக எடுக்கும் போது மினிமம் கேரண்டி உள்ளவை. எனவே அந்த வழியில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.புதிய இயக்குநர் ,தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள்.
கூல் சுரேஷும் நானும் 'காதல் அழிவதில்லை' என்ற டி ஆர் படத்தில் துணை நடிகராக நுழைந்து கஷ்டப்பட்டு மெல்ல மெல்ல மேலே வந்தவர்கள் .நிறைய பேர் சினிமாவில் வந்து போராடிவிட்டு முடியவில்லை என்று மனரீதியாக சோர்வு அடைவதை நாம் பார்க்கிறோம். ஆனால் கூல் சுரேஷ் அப்படிப்பட்டவர் அல்ல. சுரேஷ் இருபது வருடமாக போராடி எவ்வளவு பேர் என்ன என்ன சொன்னாலும் கேலி செய்தாலும் கிண்டல் செய்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறார். யார் எதைப் பற்றிக் கூறினாலும் கவலைப்படாமல் நாம் எதை நோக்கிச் செல்கிறோமோ அந்தப் பாதையில் உறுதியாக செல்ல வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் இருக்கிறார்” என்றார்.