”பல வருட வலி, கண்ணீர் மற்றும் உணர்ச்சிப் போராட்டத்திற்கு”... நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மனம் திறந்த கேரள நடிகை...!
கேரளா மாநிலத்தில் பிரபல நடிகை கடந்த 2017 ஆம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 12 ஆம் தேதி எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பல்சர் சுனில் 6 பேருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டார். இந்த தீர்ப்பை சிலர் ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்த பாதிக்கப்பட்ட நடிகை தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “8 ஆண்டுகள், 9 மாதங்கள் மற்றும் 23 நாட்களுக்குப் பிறகு, மிக நீண்ட மற்றும் வேதனையான ஒரு பயணத்தின் முடிவில் நான் இறுதியாக ஒரு சிறிய ஒளிக்கீற்றைக் கண்டேன். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது, அதற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
என் வலியை ஒரு பொய் என்றும், இந்த வழக்கை ஒரு கற்பனை கதை என்றும் கூறியவர்களுக்கு இந்தத் தருணத்தை அர்ப்பணிகிறேன். இன்று நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மேலும், இந்த வழக்கின் முதல் குற்றவாளி, எனது தனிப்பட்ட ஓட்டுநர் என்பது முற்றிலும் பொய்!.அவர் என் ஓட்டுநர் அல்ல, எனக்குத் தெரிந்தவரும் அல்ல. அவர் 2016-ல் நான் பணியாற்றிய ஒரு திரைப்படத்திற்கு ஓட்டுநராக நியமிக்கப்பட்ட ஒரு அறிமுகமில்லாத நபர். அந்த நேரத்தில் அவரை ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே சந்தித்தேன். அதன் பின் அந்நபரை இந்த குற்றம் நடக்கும் நாள் வரையோ அல்லது அதன் பிறகோ ஒருபோதும் சந்தித்ததில்லை. தயவுசெய்து தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள்.
இந்தத் தீர்ப்பு எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. இந்த வழக்கில் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே, ஏதோ சரியில்லை என்று நான் உணரத் தொடங்கினேன். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட குற்றவாளியின் விஷயத்தில், வழக்கு கையாளப்பட்ட விதத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அரசுத் தரப்பும் கவனித்தது.
பல வருடங்களாக, நான் பலமுறை உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகி, இந்த நீதிமன்றத்தை நான் நம்பவில்லை என்று தெளிவாகக் கூறினேன். இந்த வழக்கை ஒரே நீதிபதியிடமிருந்து மாற்றுவதற்கான என் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.
பல வருட வலி, கண்ணீர் மற்றும் உணர்ச்சிப் போராட்டத்திற்குப் பிறகு, நான் ஒரு வேதனையான உணர்தலுக்கு வந்துள்ளேன்: 'இந்த நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை. நாளின் இறுதியில், மனித தீர்ப்பு எவ்வளவு வலுவாக முடிவுகளை வடிவமைக்க முடியும் என்பதை இந்தத் தீர்ப்பு எனக்கு உணர்த்தியது. ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரே மாதிரியாக செயல்படாது என்பதையும் நான் அறிவேன். இந்த நீண்ட பயணம் முழுவதும் என்னுடன் நின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
மேலும் மோசமான கமென்ட்களால் என்னைத் தாக்கும் அனைவருக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்; நீங்கள் எதைச் செய்வதற்காகக் கூலியைப் பெற்றுக் கொள்கிறீர்களோ, அதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில், இந்த விசாரணை நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லாததற்கான காரணங்கள் இவைதான்:
* எனது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை. இந்த வழக்கின் மிக முக்கியமான ஆதாரமான மெமரி கார்டு நீதிமன்றக் காவலில் இருந்தபோது மூன்று முறை சட்டவிரோதமாக அணுகப்பட்டது கண்டறியப்பட்டது.
* நீதிமன்ற சூழல் வழக்குத் தொடரும் தரப்புக்கு விரோதமாக மாறிவிட்டதாகத் கூறி, இரண்டு அரசு வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் இருந்து ராஜினாமா செய்தனர். இந்த நீதிமன்றம் பாரபட்சமானது என்று உணர்ந்த அவர்கள், இந்த நீதிமன்றத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறினர்.
* மெமரி கார்டை சேதப்படுத்தியது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று நான் பலமுறை கோரிக்கை வைத்தேன். இருப்பினும், நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கும் வரை எனக்கு விசாரணை அறிக்கை வழங்கப்படவில்லை.
* நியாயமான விசாரணைக்காக நான் போராடிக்கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தார். இது என் மனதில் இன்னும் கடுமையான சந்தேகங்களை எழுப்பியது.
* மாண்புமிகு இந்திய ஜனாதிபதி மற்றும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் ஆகியோருக்கு எனது கவலைகளை வெளிப்படுத்தியும் தலையீட்டை கோரியும் கடிதங்கள் எழுதினேன்.
* பொதுமக்களும் ஊடகங்களும் ஆஜராகி என்ன நடக்கிறது என்பதை தாங்களாகவே பார்க்கும் வகையில், திறந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்துமாறு நீதிமன்றத்தை நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் என் கோரிக்கை மறுக்கப்பட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.