நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது.!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி மோகன்லால் திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட விநியோகர் மற்றும் இயக்குநர் போன்ற பன்முக கலைஞராகவும் திகழ்கிறார்.
மோகன்லால் இதுவரை சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகள் உட்பட மொத்தம் நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் 9 கேரள மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தொடர்ந்து இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 2019 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், தாதா சாகேப் பால்கே விருது தேர்வுக் குழு வழங்கியுள்ள பரிந்துரையின்பேரில், மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருதை இந்திய அரசு வழங்குவதாக அறிவிக்கப்படுகிறது என்றும் செப். 23-இல் நடைபெறும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படும் மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.