நடிகர் அஜித்திற்கு என்ன சிகிச்சை நடந்தது? மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்!
நடிகர் அஜித்திற்கு மூளைகட்டி அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு - தனி சின்னத்தில் போட்டி என வைகோ பேட்டி!
அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதையும் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல நேற்று மருத்துவ பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நடிகர் அஜித் சென்றிருந்தார். பரிசோதனைகள் முடிவில் அவரின் மூளையில் லேசான வீக்கம் இருந்தது தெரியவந்திருப்பதாகவும், அப்போலோ மருத்துவமனையில் மருத்துவர் பெரியகருப்பன் தலைமையில் நடிகர் அஜித்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியானது அகற்றப்பட்டது என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், அஜித்துக்கு மூளையில் கட்டியும் இல்லை அறுவைச் சிகிச்சையும் இல்லை என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். காதில் ஏற்பட்ட உபாதைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதையும் நேற்றே சரி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த சிகிச்சை அவரின் பணியும், நடவடிக்கையும் பாதிக்காது என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், திட்டமிட்டப்பட்டி அடுத்த வாரம் விடாமுயற்சி படபடிப்பிற்கான பணியில் அஜித் ஈடுபடுவார் என சுரேஷ் சந்திரா தெரிவித்தார்.