ஸ்ட்ராங் ரூம் CCTV கேமராக்கள் பழுது இல்லாமல் இயங்க நடவடிக்கை தேவை - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!
ஸ்ட்ராங் ரூம் CCTV கேமராக்கள் பழுது இல்லாமல் இயங்க நடவடிக்கை தேவை என தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி தமிழ்நாட்டில் 69.76% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங்க் ரூம்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அவை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஸ்டிராங் ரூமிலும் சிசிடிவி கேமரா பழுது இல்லாமல் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி ஸ்டிராங் ரூமில் கடந்த 27 ஆம் தேதி 20 நிமிடங்கள் சிசிடிவி கேமரா இயங்கவில்லை. இதற்கு பலரும் கரும் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில் தொடர்ச்சியாக சிசிடிவி இயங்கியதால் மின் இணைப்பில் கோளாறு ஏற்பட்டதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்திருந்தார்.
எனவே இது போன்ற கோளாறு தமிழகத்தில் உள்ள எந்த ஸ்டிராங் ரூமிலும் ஏற்படக் கூடாது என திமுக தரப்பில் இருந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வேட்பாளர்கள் எப்போது ஸ்டிராங் ரூமின் சிசிடிவி காட்சிகளை பார்க்க கோரினாலும் அனுமதி வழங்க வேண்டும். வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமை சுற்றி உள்ள 500 மீட்டர் தொலைவிற்கு டுரோன்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.