பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை ரத்து - உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு குற்றவாளி மறுஆய்வு மனு!
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 11 குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் ரூபாபாய் சந்தனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
2002 குஜராத் கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மே லும், இந்த கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் பாஜக அரசு விடுவித்தது.
இதையும் படியுங்கள் : கேரளாவில் குவிந்த ரசிகர்கள்! – கூட்ட நெரிசலில் சேதமான விஜய் கார்!
குற்றவாளிகள் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கீஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவர்களின் விடுதலையை ரத்து செய்யக்கோரி பலர் பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்தனர். பில்கிஸ் பானு மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் 2002 கலவரத்தின் போது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 கைதிகளை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசின் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், பில்கீஸ் பானு குற்றவாளிகள் விவகாரத்தில் நிவாரணங்களை வழங்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம், பெண்களின் மரியாதை முக்கியம், பெண்கள் மரியாதைக்குரியவர்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் பில்கீஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் முடிவு ரத்து செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் இரண்டு வாரத்திற்குள் சிறை அதிகாரிகள் முன்பு சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, குற்றவாளிகள் 10 பேர் தரப்பில், சரணடைய மேலும் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு குடும்பப் பொறுப்புகள், வயதான பெற்றோரைப் பராமரித்தல், குளிர்காலப் பயிர்களை அறுவடை செய்தல் உள்ளிட்ட காரணங்களை கூறி தங்களுக்கு 6 வாரம் வரை சரணடைய அவகாசம் வழங்க வேண்டும் என விண்ணப்பித்திருந்தனர்.
இந்த மனுக்கள் ஜனவரி 22 ஆம் தேதி விசாரிக்கப்பட்ட நிலையில், மனுக்களை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஜனவரி 8-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி 2 வாரத்திற்குள் சரணடைய ஆணையிட்டது. இதையடுத்து, ஜனவரி 21 ஆம் தேதி அவர்களுக்கு அளிக்கப்பட்ட கெடு முடிவடைந்த நிலையில், விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் மாநிலம் பஞ்சமஹாலில் உள்ள கோத்ரா சிறையில் ஜனவரி 21 ஆம் தேதி இரவு சரணடைந்தனர்.
இந்நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் தங்கள் விடுதலையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, 11 குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் ரூபாபாய் சந்தனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ரமேஷ் ரூபாபாய் சந்தனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
"பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளின் தண்டனை குறைப்பு விண்ணப்பங்களைப் பரிசீலிக்குமாறு 2022-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு மாறாக ஜனவரி 8-ஆம் தேதி 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தவறு செய்துள்ளது. இது நீதிமன்றங்கள் இணக்கமாக செயல்பட வேண்டும் என்ற கொள்கைக்கு முரணாக உள்ளது. மேலும் குற்றத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டும், நீதி வேண்டும் என்று சமூகம் கூச்சலிடுவதற்காகவும் தண்டனை குறைப்பை ரத்து செய்யக் கோர முடியாது. எனவே விடுதலையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்"
இவ்வாறு ரமேஷ் ரூபாபாய் சந்தனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரித்துள்ளார்.
முன்னதாக பில்கிஸ் பானு வழக்கில் தங்கள் விடுதலையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, ராதேஷியாம் பகவான்தாஸ் ஷா, ராஜுபாய் பாபுலால் சோனி ஆகிய இரு குற்றவாளிகள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், மேலும் ஒருவர் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.