சொத்துக் குவிப்பு வழக்கு - மற்றொரு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து!
கடந்த 1996-2001 ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.3.92 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கிலிருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனடிப்படையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரை கடந்த 2007ம் ஆண்டு வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்தது . இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் அமைச்சர் துறைமுகம் மீதான மற்றொரு சொத்து மதிப்பு வழக்கு வழக்கையும் ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006-11 ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், 2007-2009 ஆம் ஆண்டு கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக 2011-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
வேலூர் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை நீதிபதி பி. வேல்முருகன் இன்று விசாரித்தார். அப்போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி தரப்பில், சொத்துக்கள் வருமான வரிக்கணக்கில் காட்டப்பட்டுள்ளன. வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள், வழக்கு காலகட்டத்துக்கு முன் வாங்கப்பட்டவை. துரைமுருகன் மனைவிக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரங்கள் இருந்தும், அவரை இல்லத்தரசி எனக் கூறி அவருக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆவண ஆதாரங்களை சுட்டிக்காட்டி, இருவரையும் வழக்கில் இருந்து கீழ் நீதிமன்றம் விடுவித்திருந்தது
ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று இன்றை விசாரணையில் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன் என தெரிவித்தார். மேலும் வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, தினந்தோறும் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.