வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்
அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக முந்தைய அதிமுக ஆட்சிகாலத்தில் போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1996 முதல் 2001 ஆண்டுகளில் திமுக ஆட்சி நடைபெற்றது. இந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, குற்றத்திற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2009-ம் ஆண்டு ஆறுமுகம், கோவிந்தன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தீர ஆய்வு செய்து தீர்ப்பு அளித்துவிட்டது. மேலும் இந்த வழக்கு காலதாமதமானது எனக் கூறி நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் நரசிம்மா அடங்கிய அமர்வு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.