For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பத்திரிகையாளர் சுகுணா திவாகர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லெனின் பார்வையில் ஒரே நாடு, ஒரே தேர்தல்!

11:03 PM Feb 16, 2024 IST | Web Editor
பத்திரிகையாளர் சுகுணா திவாகர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லெனின் பார்வையில் ஒரே நாடு  ஒரே தேர்தல்
Advertisement

ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் விவாத பொருளாகியுள்ள நிலையில், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி கேள்வி நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரிகையாளர் சுகுணா திவாகரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லெனினும் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம். 

Advertisement

ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த வேண்டும் என்றால், 30 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை. ஆனால் தற்போது நம்மிடம் அவ்வளவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லை. ஏற்கனவே 10 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தாலும் சுமார் 20 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்ய வேண்டும். அப்படியே நாம் தயாரித்தால் கூட ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தின் ஆயுள் காலம் 15 வருடம் தான். 3 தேர்தலுக்கு ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றிக்கொண்டே இருக்கனும். இதுதான் நடைமுறை எதாராத்தம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கு இவர்கள் சொல்லக்கூடிய காரணம் செலவுகளை குறைப்பதுதான். ஆனால் உண்மையிலேயே செலவுகள் குறையுமா என்பது கேள்விக்குறிதான். இப்படி இருக்கும் சூழலில் வரவுள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் கூட இது சாத்தியமாகிவிடக்கூடாது என்பதற்காகவே தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

தமிழ்நாடு அரசு கூறியதை போல், ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகதான் இருக்கிறது. ஏன் என்றால் மாநில அரசு கலைந்தால் கூட பரவாயில்லை நாடாளுமன்றத்திற்கு எப்போது தேர்தல் வருமோ அப்பதான் தேர்தல் வரும் என்கிற சூழல் உருவாகிவிட்டது என்று சொன்னால் அது இன்னுமே மாநில அரசுகளுக்கு நெருக்கடியான சூழலை உருவாக்கிவிடும்.

இரண்டாவது இந்த தொகுதி மறுவரையறை என்பதை பார்த்தோமானால், தற்போதைய நிலவரப்படி தென்னிந்தியாவில் பாஜக பெருமளவுக்கு சுருங்கிவிட்டது. அப்படி இருக்கையில் தற்போது வரவுள்ள தேர்தலில் இந்தியா கூட்டணி அதிகமான தொகுதிகளில் வெல்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டால் கூட தென்னிந்தியாவில் உள்ள மொத்த தொகுதிகளையும் எண்ணிப் பார்த்தால், 160 மக்களவை உருப்பினர்தான் வருவார்கள். தற்போதே இந்தி பேசக்கூடிய மாநிலங்கள் தான் பிரதமரை தேர்வு செய்யும் சூழல் இருக்கையில், மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதி மறுவரையறை செய்தால் தென்னிந்திய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும், குறிப்பாக தமிழ்நாடும், கேரளாவும் தான் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தி மக்கள்தொகையை பெருமளவு குறைத்திருக்கிறோம். இதனால் மக்கள் தொகை கணக்கெடுப்புபடி தொகுதி மறுவரையறை செய்தால் தென் மாநிலங்கள் தான் கடுமையாக பாதிக்கப்படும்.

தொகுதி மறுவரையறையை எப்படி நடைமுறைபடுத்தினால் தென்னிந்தியாவிற்கு சம வாய்ப்பு கிடைக்கும்?

சட்டப்பேரவையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். 1971-ஆம் ஆண்டு பீகாரிலும் தமிழ்நாட்டிலும் மக்கள் தொகை ஒரே அளவுதான் இருந்தது. ஆனால் இன்று தமிழ்நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளது. பீகாரில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. குடும்ப கட்டுப்பாடு சட்டத்தை நாம் முறையாக அமல்படுத்தினோம். ஆனால் பீகாரில் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை. இதுதான் அங்கு மக்கள் தொகை அதிகரிக்க காரணம்.

தென்னிந்திய முதல்வர்களான தமிழ்நாடு முதல்வர், கேரள முதல்வர், கர்நாடக முதல்வர் ஆகியோர் டெல்லிக்கே சென்று தங்களுக்கு சரியான நிதிப்பகிர்வை தருமாறு கேட்டு போராட்டம் நடத்தும் சூழல் நிலவுகிறது. இதற்கு மத்திய அரசு தரப்பில் பதில் கூறும் போது உத்தரபிரதேசத்தில் பின்தங்கிய மக்கள் அதிகமானோர் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு நிதிப்பகிர்வு அதிகமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. நாளை மக்கள் தொகை அடிப்படையில் தான் எம்.பிக்களின் எண்ணிக்கை இருக்கும் என்றால் அவர்களின் குரல்தான் ஓங்கி ஒலிக்கும்.

இந்த நிலையில் தேர்தல் முறைகளில் சீர்திருத்தம் வேண்மா என்று கேட்டால் கண்டிப்பாக வேண்டும். கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்-ன் மகன் ஓ.பி.ரவிச்சந்திரன் மட்டும் தான் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றார். 38 எம்.பிக்கள் பாஜக அல்லாதோர். இதே போன்று 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பார்த்தோமானால், அன்புமணி ராமதாஸ் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரை தவிர 37 பேர் பாஜக அல்லாத திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள்.

இதன்படி கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவை தமிழ்நாடு புறக்கணித்துள்ளது. ஆனாலும் நமக்கு மோடிதான் பிரதமர். நமக்கான ஆளும் கட்சி பாஜக தான். இப்படி இருக்க மத்திய அமைச்சரவையில் நமக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்பது எப்படி சரியான நடைமுறையாக இருக்க முடியும். அப்போது 99 வாக்குகள் பெற்றவர் தோற்றுவிடுவார் 100 வாக்குகள் வாங்கியவர் வெற்றிபெருவார் என்கிற நடைமுறை மாற்றப்பட்டு, சதவீதத்தின் அடிப்படையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.  அதே சீர்திருத்தம் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தேவை. அதே போன்று மத்தியிலும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து கட்சியினருக்கும் அமைச்சாவையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தலில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். சட்டப்பேரவையில் ஒரு தொகுதியில் 50 வேட்பாளர்கள் வரை நிற்கின்றனர். அதே போன்று உள்ளாட்சி தேர்தலுக்கான போட்டியில் ஒரே தொகுதியில் 100-க்கும் மேல் வேட்பாளர்கள் நிற்பது கூட நடக்கிறது. இந்நிலையில் தேர்தலின் போது எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரே பூத்தில் வைக்க முடியும். சட்டப்பேரவை தேர்தல் மட்டும் நடந்தாலே 2 அல்லது 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பார்கள். இதே நேரத்தில் 3 தேர்தலையும் ஒன்றாக நடத்தினால் 7 அல்லது 8 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அருகருகே வைக்க வேண்டும். இந்நிலையில், வாக்களர் எப்படி தெளிவாக வாக்களிக்க முடியும். இப்படி நிர்வாக ரீதியிலான குளறுபடிகளை களைந்தாலும் கொள்கை ரீதியில் இது சரியா? ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜகவின் கொள்கையான ஒரே நாடு, ஒரே மதம், ஒரே சட்டம் என்பதை ஒத்தது.

ஒரு மாநிலத்தில் அரசு கவிழ்ந்துவிட்டது என்றால் உடனே தேர்தல் நடத்தாமல் அடுத்த நடாளுமன்ற தேர்தல் வரை குடியரசு தலைவர் ஆட்சி நடைபெறும் என்றால், இது 1962-ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலைக்கு நாட்டை இழுத்துச் செல்லும்.

இரண்டாவது மிகப்பெரிய பிரச்னை, நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பிரச்னைகளும், சட்டப்பேரவை தேர்தலில் மாநில பிரச்னைகளும் முன்னிலைப்படுத்தப்படும். ஆனால் இரண்டு தேர்தலையும் சேர்த்து நடத்தும் போது மாநில பிரச்னைகள் கவனம் பெறாமல் மத்திய பிரச்னைகள் மட்டுமே கவனம் பெறும். இதனால் மாநில நலன் பாதிக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவத்தை கொண்ட கூட்டாட்சி தத்துவமே வேண்டுமெ தவிர, மறுபடியும் பின்னோக்கி செல்லவே கூடாது.

இந்நிலையில் தேர்தல் சீர்திருத்தம் என்பது எல்லோருக்கும் ஜனநாயகம் போய் சென்றடையவே வழிவகுக்க வேண்டும். எல்லோருக்கும் அதிகாரம் போய் சேர வேண்டும் என்பது மாறி மீண்டும் மீண்டும் அதிகார குவியல் என்பதே நடக்கிறது என்பதே இன்று இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்னை. இவ்வாறு பத்திரிகையாளர் சுகுணா திவாகர் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லெனின் கூறியதாவது:

வறுமை அதிகரித்திருக்கிறது, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு நாம் எதை பத்தி விவாதித்துக்கொண்டு இருக்கிறோம் பார்த்தீர்களா? நாம் எதை விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுக்கிறார்கள். அதற்குள் நம்மை இழுத்துச்செல்கிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவிற்கு புதிதா?  ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியாவில் இல்லாமலா இருந்தது. 1962 வரை ஒரே தேர்தலாகதானே நடந்தது. ஏன் அது மாறியது. ஜனநாயக நாடு என்பதால் மாறியது. பெரும்பான்மையை சட்டப்பேரவையாக இருந்தாலும் நாடாளுமன்றமாக இருந்தாலும் நிரூபிக்க வேண்டும். அப்படி இருக்க ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறை படுத்திவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். இந்நிலையில் ஒரு மாநிலத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றாலோ அல்லது ஆளும் கட்சி பெரும்பான்மையை இழக்க நேரிட்டாலோ அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை காத்திருக்க முடியாது. ஏனென்றால் ஒரு அரசு பெரும்பான்மையை இழந்தால் 6 மாதத்திற்குள் அடுத்த அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது அரசியலமைப்பு விதி.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த தற்போது கமிட்டி அமைக்க வேண்டியதின் அவசியம் என்ன இருக்கிறது? வருமையை ஒழிக்க கமிட்டி போடலாமே, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு விண்ணை முட்டுதே. பெட்ரோல் டீசல் விலையை அந்தந்த நிறுவனங்களே தீர்மானிக்கலாம் என நீங்கள் தானே கொண்டு வந்தீர்கள். 670 நாட்களுக்கு மேல் பெட்ரோல், டிசல் விலையில் மாற்றமில்லை ஏன்? அந்த நிறுவனங்களால் ஏன் விலையை நிர்ணயிக்க முடியவில்லை. அரசு ஏன் அதை தடுக்கிறது. இப்படி அனைத்து பிரச்னைகளையும் உற்று நோக்கினால் அவர்களின் நோக்கம் திசை திருப்புவதே என்பது தெரியவரும்.

ஆர்டிகில் 81 பிரிவு 2-ல் தொகுதி மறுவரையரை குறித்து மிகத் தெளிவாக கூறுகிறது. மாநில மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் மறுவரையறை செய்ய வேண்டும். அதே நேரத்தில் பழங்குடியின மக்கள் 60 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் அதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. இதன்படி பழங்குடியின மக்களின் பங்களிப்பை குறைத்துவிடக் கூடாது எனக் கூறுகிறது. இது தான் எல்லா மொழி பேசும் மாநிலத்திற்கும் தேவை. இந்திய அரசின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஏற்று சரியாக நடைமுறை படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்கு தண்டனையும், இந்திய அரசு கூறியதை மீறி நடந்துகொண்டதற்காக வட மாநிலங்களுக்கு பரிசும் கொடுக்கிறீர்களா? இதே பிரச்னை 2001-ஆம் ஆண்டு வந்த போது அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, வடமாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வர 25 ஆண்டுகள் அவகாசம் வழங்கி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தள்ளி வைத்தது. அந்த கால அளவு 2026-ல் முடிகிறது.

தேர்தல் முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் என்கிறார்களே. வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷியே கூறியிருக்கிறார். “முன்பெல்லாம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஆனால் தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை வெளியிலிருந்து இயக்கலாம்” என குரேஷி கூறியிருக்கிறார்.

எதெற்கெடுத்தாலும் உச்சநீதிமன்றம் கூறியது என இந்த மத்திய அரசு கூறுகிறதல்லவா. உச்சநீதிமன்றம் கூறியபடி, அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களுடனும் அந்த எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில் விவிபேட் எந்திரங்கள் இணைக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. தேர்தலில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய விசயங்களில் எல்லாம் காட்ட வேண்டிய முனைப்பை காட்டாமல் தேவையற்ற விசயங்களில் ஆர்வம் காட்டுவது ஏன்? எது தேவையோ அதை விடுத்து எது தேவை இல்லையோ அதை பிரச்னையாக்குவதை தான்  ஹிட்லர் செய்தார், முசோலினி செய்தார், மோடியும் செய்கிறார்.

டிஜிட்டல் இந்தியா குறித்து பேசும் இவர்களால் ஒரே நாளில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த முடியுமா? உள்ளாட்சித் தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்த முடியுமா? வேலை வாய்ப்பின்மை, விலையேற்றம் ஆகியவற்றில் இருந்து திசை திருப்பவே மத்திய அரசு இவை அனைத்தையும் செய்து வருகிறது. அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம், ஆனால் அது எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். தேர்தல் களத்தில் எல்லோருக்கும் சம வாய்ப்பை தருவதாக இருக்க வேண்டும். ஆளும் கட்சிக்கும் மட்டும் சாதகமாக ஒரு தேர்தல் நடைமுறை வருமேயானால் அது சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு.

மக்களுக்கு தேவையான அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்க இந்த அரசு குழு அமைக்கலாமே. அதையெல்லாம் செய்யாமல் மக்கள் ஒன்றிணைந்து நின்றுவிடக்கூடாது என்பதற்காக குழப்பங்களை விளைவிக்க ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற வெற்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லெனின் கூறியுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்; தொகுதி மறுவரையறை; தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியா? என்ற தலைப்பில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 14.02.2024 அன்று நடைபெற்ற கேள்வி நேர விவாதத்தை முழுமையாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Tags :
Advertisement