For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அதிகரிக்கும் விபத்துகள் - அதிரடியில் இறங்கிய #Nellai மாநகராட்சி!

11:07 AM Oct 26, 2024 IST | Web Editor
சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அதிகரிக்கும் விபத்துகள்   அதிரடியில் இறங்கிய  nellai மாநகராட்சி
Advertisement

நெல்லையில் கால்நடை மோதியலில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி படுகாயமடைந்த நிலையில், அப்பகுதி சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் சாலையில் செல்பவர்களையும் கால்நடைகள் தாக்குகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்த வண்ணம் உள்ளன. ஆனால் அதை பொருட்படுத்தாமல் பல இடங்களில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிகிறது.

இந்த சூழலில், கடந்த 22-ம் தேதி நெல்லை திருமால் நகர் பகுதியை சேர்ந்த மாணவி சுவாதிகா, கல்லூரிக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, தியாகராஜ நகர் 2-வது நடுத்தெருவின் வழியாக சென்ற போது, அங்கு சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த கால்நடைகளில் ஒன்று, எதிர்பாராத விதமாக திடீரென சாலையின் குறுக்கே ஓடியது. அப்போது அங்கு வந்த மாணவியின் ஸ்கூட்டியில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் மாணவி சுவாதிகா ஸ்கூட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.  இதில் படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, சாலையில் திரியும் கால்நடைகளை மீட்டு, உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க நாகர்கோவில் கோசாலையிலிருந்து திருநெல்வேலிக்கு 3 குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

குழுவிற்கு 6 பேர் வீதம் 18 பேர் கால்நடைகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிடிபடும் கால்நடைகளை கொண்டு செல்வதற்காக பிரத்யேக வாகனங்களும் வந்துள்ளன. முதற்கட்டமாக மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைககள் பிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 27 கால்நடைகள் பிடிக்கப்பட்டுள்ளன. பிடிபடும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட கால்நடைகளுக்கு 3 நாட்களுக்குள் உரிமை கோர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement