டேங்கர் லாரி மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு!
மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் பத்னாவர்-உஜ்ஜைன் நெடுஞ்சாலையில் உள்ள பமன்சுதா கிராமத்திற்கு அருகே நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் டேங்கர் லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த டேங்கர் லாரி தவறான பாதையில் திரும்பியதாக சொல்லப்படுகிறது. அப்போது எதிர் திசையில் வந்துகொண்டிருந்த கார் மற்றும் ஜீப் டேங்கர் லாரி மீது அடுத்துதடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ரத்லம், மண்ட்சவுர் (மத்திய பிரதேசம்), ஜோத்பூர் (ராஜஸ்தான்) மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்தை ஏற்படுத்திய கேஸ் டேங்கர் லாரி ஓட்டுநர் தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.