ரயிலில் செயலிழந்த ஏசி! பயணத்தொகையின் 50% சதவீதத்தை திருப்பி அளித்து மன்னிப்பு கோரிய ஸ்வீடன் ரயில்வே!
ரயிலில் ஏசி வேலை செய்யாததால் ஸ்வீடன் வாழ் இந்தியப்பெண்ணிடம் மன்னிப்பு கோரியதோடு, பயணத்தொகையின் 50% சதவீதத்தை திருப்பி தருவதாக ஸ்வீடன் நாட்டு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஸ்வீடனில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவொன்று வைரலாகி வருகிறது. இவர் பயணித்த ரயிலில் ஏசி செயலிழந்துள்ளது. இதனையடுத்து ஸ்வீடன் ரயில்வே நிர்வாகம் அந்த ரயிலில் பயணித்த அனைவருக்கும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், உங்கள் ரயிலில் உள்ள ஏசி பழுதடைந்துள்ளது. பயணத்தொகையின் 50% உங்களுக்கு திருப்பி அளிக்கப்படும். அதற்கான உங்கள் வவுச்சரை மின்னஞ்சல் மூலம் பெறுவீர்கள். சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்.
"உங்கள் பயணத்தை இலவசமாக மறுபதிவு செய்ய" அல்லது "ரத்துசெய்து பணத்தைத் திரும்பப் பெற" விரும்பினால் இணையதளத்தைப் பார்வையிடலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தியின் ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்து, இதனால்தான் நான் ஸ்வீடனில் அதிகவரி குறித்து நான் புகார் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு தற்போது வரை 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் பல கருத்துகளை பெற்று வருகிறது. பலர் ஸ்வீடன் அரசை பாராட்டி வந்தாலும், இந்திய ரயில்வேவை விமர்சித்து வருகின்றர். காரணம் பலமுறை இந்திய ரயில்வேயால் வழங்கப்படும் உணவுகளில் பூச்சிகள் கிடப்பது, திடீரென ரயில் ரத்து செய்யப்படுவது, ஒழுங்கான பராமரிப்பு இல்லாதது போன்றவற்றை குறிப்பிட்டு விமர்சிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புகூட 20 வினாடிகள் முன்பு சென்றதற்காக பயணிகளிடம் ஜப்பான் ரயில்வே மன்னிப்புக் கோரியது குறிப்பிடதக்கது.