சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து!
சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது, இதே குற்றச்சாட்டுக்காக மாநிலம் முழுவதும் 16 வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து சவுக்கு சங்கரை சென்னை கமிஷனர் உத்தரவின்பேரில் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த உத்தரவை எதிர்த்து சவுக்கு சங்கின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விசாரணை நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. “சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என மனுதாரர் தரப்பில் ஏற்கெனவே வைக்கப்பட்ட வாதத்தை ஏற்ற நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.