37 பந்துகளில் 2வது டி20 சதத்தை விளாசினார் அபிஷேக் ஷர்மா!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 2) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். சஞ்சு சாம்சன் அதிரடியாக தொடங்கினாலும், 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அதிரடியாக விளையாடிய அவர் 17 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார். இதன் மூலம், இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்தார். தொடர்ந்து விளையாடி வரும் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 5 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம் டி20 போட்டியில் தனது 2வது சதத்தையும் அபிஷேக் சர்மா விளாசினார்.