#AAP | டெல்லியின் முதலமைச்சர் ரேஸில் வெற்றி பெற்ற அதிஷி - யார் இவர்?
டெல்லியின் முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது அரசியல் பயணம் குறித்து காணலாம்.
மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையாலும், பின்னர் சிபிஐயாலும் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து சுமார் 6 மாத சிறைவாசத்துக்கு பிறகு கடந்த வாரம் விடுதலையானார். அவர் முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது, ஆவணங்களில் கையெழுத்து போடக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்ததால், முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று (செப். 16) அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மணிஷ் சிசோடியா, கைலாஷ் கெலாட், அதிஷி, துணை சபாநாயகர் ராக்கி பிர்லா மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை குறித்து விவாதித்தனர். இதையடுத்து, இன்று (செப். 17) மாலை 4 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு மதியம் 12 மணிக்கு புதிய முதலமைச்சர் யார் என்று அறிவிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. அதன்படி, கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷி, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த அதிஷி?
ஜூன் 8, 1981-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் விஜய் குமார் சிங் மற்றும் திரிப்தா வாஹி ஆகியோருக்கு பிறந்தவர் அதிஷி மர்லினா. இவர் புது டெல்லியில் உள்ள ஸ்பிரிங்டேல் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் 2001-ல் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு பிரிவில் இளங்கலைப் பட்டமும், 2003-ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தொடர்ந்து 2005-ம் ஆண்டு கல்வி ஆராய்ச்சியில் ரோட்ஸ் அறிஞராக ஆக்ஸ்போர்டில் தனது இரண்டாவது முதுகலைப் பட்டத்தை பெற்றார்.
அதிஷியின் அரசியல் பயணம்
2012-ம் ஆண்டு ஆம் ஆத்மி நிறுவப்பட்ட நேரத்திலேயே அதிஷி மர்லினா கட்சியில் சேர்ந்தார். பின்னர் 2013 சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கை வரைவுக் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி உருவாக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் கட்சியின் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளராக இருந்துள்ளார். ஜூலை 2015 முதல் ஏப்ரல் 2018 வரை டெல்லியின் துணை முதலமைச்சரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் தான் தனது குடும்பப்பெயரான மர்லினாவை நீக்கி விட்டு, அதிஷி என குறிப்பிட ஆரம்பித்தார். டெல்லி அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் இவர் ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் 4.77 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தொடர்ந்து, 2020-ல் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். 2020 தேர்தலுக்குப் பிறகு, அவர் ஆம் ஆத்மி கட்சியின் கோவா பிரிவுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் 2023-ம் ஆண்டில் டெல்லியின் கல்வி, பொதுப்பணித் துறை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மாணவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் உணர்ச்சி வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு புதுமையான பாடத்திட்டத்தையும் அதிஷி அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்கும் மூன்றாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் சுஷ்மா ஸ்வரராஜ் மற்றும் ஷீலா தீட்சித் ஆகியோர் முதலமைச்சராக பதவி வகித்துள்ளனர்.