29 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் அமீர்கான் !
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் பாலிவுட் நடிகர் அமிர் கான் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீர் உடல்நிலை காரணமாக சில நாள்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் ரஜினி மீண்டும் பங்கேற்று நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் கூலி படத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பதாக பல நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் அவை உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அமீர் கானை வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறாராம் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமீர் கான் தொடர்பான காட்சிகளை படமாக்க ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு படக்குழு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான ‘ஆதங் இ ஆதங்’ இந்தி படத்தில் ரஜினியும் , அமீர் கானும் சேர்ந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் 29 ஆண்டுகள் கழித்து மீண்டும் இருவரும் கூலி படத்தின் மூலம் இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.