‘பிரதமர் மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்’..சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்றி ஆம் ஆத்மி பரப்புரை!
கெஜ்ரிவாலின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்த முகப்புப் படத்தை மாற்றி பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் கைதுக்கு பல முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலர் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி தன் எதிர்ப்பை பல வழிகளில் தெரிவித்து வருகிறது. மேலும் இந்திய கூட்டணி ராம் லீலா மைதானத்தில் கண்டன பேரணியை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் தங்கள் எதிர்ப்பை நீட்டிக்க, ஆம் ஆத்மி தலைவர்கள் DP பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.
‘பிரதமர் மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்’ என்ற தலைப்புடன் கெஜ்ரிவால் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருப்பது போன்ற புகைப்படத்தை தங்கள் முகப்பு பக்கங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் வைத்துள்ளனர்.
டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், மார்ச் 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து அவர் காவலில் இருந்து வருகிறார்.