ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர் நிலைகளில் திரண்ட பக்தர்கள்!
ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்காசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
அமாவாசை தினங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை ஆகியவை 3 அமாவாசைகளை முக்கிய அமாவாசை தினங்களாக காலம் காலமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், ஆடி அமாவாசை தினமான இன்று (ஆக. 4) முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் நீர்நிலைகளில் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக, ஆடி அமாவாசை தினத்தில் பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் நம்மை பார்ப்பதற்காக பூலோகத்திற்கு புறப்படும் நாள் என ஐதீகம் கூறும் நிலையில், இந்த அமாவாசைகளில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்தால் பித்ரு தோஷம், பித்ரு சாபம் நீங்கும் எனவும், ஆடி அமாவாசையில் கொடுக்கப்படும் தர்ப்பணம் 42 தலைமுறைகளின் சாபங்களை போக்கக் கூடிய தன்மை கொண்டது இவ்வாறு கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிக்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக அருவிக்கரையில் குவிந்து வரும் நிலையில், குற்றால அருவியில் நீராடி சூரிய உதயத்திற்கு பிறகு தங்களது முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு எள், எண்ணெய், பிண்டம் வைத்து வழிபாடு நடத்தி அதை நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : “வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்தோருக்கு பாதுகாப்பான இடத்தில் புதிய வீடுகள்” – கேரள அரசு அறிவிப்பு!
அதேபோல், உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். கடலில் புனித நீராடி வேத மந்திரங்களை சொல்லியும் முன்னோர்களிடம் பாவ மன்னிப்பு கோரியும் வழிபாடு செய்தனர். எள், அன்னம், காய்கறிகள் கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பாபநாசம், பாவநாத சுவாமி கோயிலில் தாமிரபரணி நதிக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதேபோல், ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.