விசிக துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம்!
விசிக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்புக்கு பிரபல தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனாவை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
விசிகவில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்துவரும் நவீனத்துவ மாற்றங்களுக்கு பின்னணி நபராக அறியப்பட்ட பிரபல தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனத்தின் தலைவரான ஆதவ் அர்ஜுனா விசிக-வின் துணைப்பொதுச்செயலாளர் என்கிற முக்கிய பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.விசிக-தலைமை அலுவலகத்தில் இன்று (15-02-24)நடந்த கட்சியின் உயர்நிலைக்குழு நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.
திமுகவுக்கு தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த ஆதவ் அர்ஜுனாவை விசிகவின் பக்கம் திருமாவளவன் அழைத்து வந்ததே கட்சியை பலப்படுத்தவும், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கியுமே என்று விசிக-வில் ஒரு பேச்சு இருந்துவந்தது. திருமாவளவனின் இந்த எண்ணத்தை நன்கு உணர்ந்தவரான ஆதவ் ஆர்ஜுனா, திருச்சியில் நடந்த மாநாட்டில், விசிக-வின் அடிப்படை உறுப்பினராக தம்மை இணைத்தும் கொண்டார்.
அதன் அடையாளமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பான துணை பொதுச் செயலாளர் பதவியை தற்போது ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கியிருக்கிறார் திருமாவளவன்.
பொதுத்தொகுதி வேட்பாளரா?
மேலும் வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளையாவது திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்பதில் அக்கட்சி உறுதியாக உள்ளது.இம்மூன்று தொகுதிகளில் 2 தனித் தொகுதிகளுடன் ஒரு பொதுத் தொகுதியும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் விசிக, திமுகவிடம் உறுதியாக எடுத்துரைத்துள்ளது.
பொதுத்தொகுதியாக பெரம்பலுார் அல்லது கள்ளக்குறிச்சி இரண்டில் ஒன்றை கண்டிப்பாக பெறும் முடிவில் விசிக உறுதியாக உள்ளது. அந்த பொதுத்தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவை வேட்பாளராக களமிறக்க விசிக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் கடந்த ஓர் ஆண்டாக ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து பயணித்து வருவதால் கட்சியினர் மத்தியிலும் அவருக்கு நன்மதிப்பு உள்ளது. தி.மு.கவுடனும் ஏற்கனவே இணைந்து பணியாற்றபவர் ஆதவ் என்பதால், தி.மு.க.தரப்பும் அவருக்கு ஆதரவாகவே உள்ளது. எனவே பொதுத்தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவை களம் இறக்கினால் எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என திருமாவளவனும் எண்ணுவதாக கூறப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் விசிகவின் சார்பில் பொதுத் தொகுதியில் ஆதவ் அர்ஜுனாவை களமிறக்கி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க ஆயத்தமாகி வருகிறது விசிக.