மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!
மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் விளக்கம் கேட்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
சமீபகாலமாக குடியுரிமை திருத்தச் சட்டம் , NPR போன்றவை குறித்த விவாதங்கள் மீண்டும் எழ தொடங்கியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர், குடியுரிமை (திருத்த) சட்டம் அடுத்த ஏழு நாட்களில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று கூறினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் இதற்கு நாடு முழுவது கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
https://x.com/MamataOfficial/status/1759549462899290326?s=20
ஆதார் ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது..
மேற்கு வங்கத்தில் உள்ள ஏராளமான மக்கள் குறிப்பாக பழங்குடியினர்,தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களின் ஆதார் அட்டைகள் திடீரென முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஆதார் அட்டைகளை முடக்கம் செய்துள்ளதற்கான காரணங்கள் என்ன?
மேலும் மேற்குவங்கத்தில் அரசின் நலத் திட்டங்களை ஆதார் அட்டைகள் இல்லாமலும் பெற்றுக் கொள்ளலாம் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக UIDAI அளித்த விளக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
“ ஆதார் அட்டைகள் மூலம் ஏராளமான மானியங்கள், பலன்கள் மற்றும் அரசின் நலத் திட்டங்களை பெறப் பயன்படுகிறது, ஆதார் தரவுத்தளத்தின் துல்லியத்தைப் பராமரிக்கவும் ஆவணங்கள் மற்றும் ஆதாரை புதுப்பிப்பதற்கான முற்சியில் UIDAI ஈடுபடத் தொடங்கியுள்ளது. ஆதார் தரவுத்தளத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைகளின் போது, ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு அவ்வப்போது அறிவிப்புகள் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக, எந்த ஆதார் எண்ணும் ரத்து செய்யப்படவில்லை" என்று UIDAI தெரிவித்துள்ளது.