சென்னை மின்சார ரயில்கள் நாளையும் இயக்கப்படாது!
இருப்புப் பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் அனைத்து மின்சார ரயில்களும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுமட்டுமல்லாது ரயில் சேவை, விமான சேவை அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை மிக்ஜாம் புயல் கரையை கடக்கிறது. இதனால் நாளை அதிகாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மின்சார சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருள் சூழ்ந்துள்ளது.
இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சாலைகள், ரயில் தண்டவாளங்கள் என எங்கு பார்க்கினும் மழை நீர் தேங்கி நிற்பதால் இன்றே பேருந்து மற்றும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நாளையும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யபப்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் - அரக்கோணம் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.