ஒரு அதிகாரிக்காக ஆயிரம் பயணிகளை அலைக்கழித்த விவகாரம்! எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டுக்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம்!!
ஒரு அதிகாரி பயணிக்க தனி ரயில் ஏற்பாடு செய்து 1000 பயணிகளை அலைக்கழித்தது குறித்து, எம்.பி. சு. வெங்கடேசன் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடு தொடர்பாக மதுரை எம்.பி சு. வெங்கடேசன், தனது X தள பக்கத்தில் பதிவிட்ட ஒரு செய்தி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்தப் பதிவில் ரயில்வேத் துறையின் ஒரு அதிகாரி பயணிக்க, தனி ரயில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அந்த அதிகாரியின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம், ஆயிரம் பயணிகளை மாற்று நடைமேடைக்கு அலைக்கழித்துள்ளதகாவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதையும் படியுங்கள்:உலகக்கோப்பை இறுதிப்போட்டி | தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் – தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்!
இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்,
நவம்பர் 16 ஆம் தேதி சென்னைக்கு வந்த ரயில்வே போர்ட் உறுப்பினர் ரூப் நாராயணன் சங்கர், ஆய்வு மேற்கொள்ள ராமேஸ்வரம் செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில், அவருக்காக 4-வது நடைமேடையில் தனி ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.
4-வது நடைமேடையில் வழக்கமாக சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் விரைவு ரயில்தான் நிறுத்தப்படும். அந்த நடைமேடையில் ரூப் நாராயணன் சங்கர் செல்வதற்காக வேறு ரயில் நிறுத்தப்பட்டதால் பாண்டியன் விரைவு ரயில், 5-வது நடைமேடையில் மாற்றி நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்த குழப்பத்தால், தான் உட்பட பாண்டியன் விரைவு ரயிலில் பயணிக்கவிருந்த முதியவர்கள், தாய்மார்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள், மாற்று நடைமேடையை நோக்கி அலைக்கழிக்கப்பட்டதாகவும் சு.வெங்கடேசன் தெரிவித்திருந்தார். மேலும் இது மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் செயல் எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம், 9 நடைமேடைகள் கொண்ட எழும்பூர் ரயில் நிலையத்தில், முதல் 3 நடைமேடைகள் குறைந்த நீளம் கொண்டவை என்பதால், அதிக நீளம்கொண்ட 4-வது நடைமேடையை பீக் ஹவர் நேரங்களில் நீண்டதூர விரைவு ரயில்களை கையாள்வதற்கு பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் பல நாட்கள் 5-வது நடைமேடையில் இருந்து பாண்டியன் விரைவு ரயில் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், அன்றைய தினமும் முழுக்க முழுக்க நிர்வாக ரீதியிலான காரணங்களுக்காகவே பாண்டியன் விரைவு ரயில் மாற்றி நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் பயணிகளை சிரமத்திற்குள்ளாக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை எனவும், வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.