நகைக் கடை உரிமையாளருக்கு வந்த ராங் கால் - ஆசை வார்த்தை கூறி பணம் பறித்த இளம் பெண்!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் ஜெகதீஷ் (28). இவர் தனது மனைவி மற்றும் ஒரே மகனுடன் வசித்துக் கொண்டு அதே பகுதியில் ஸ்ரீ வேல்முருகன் என்ற பெயரில் நகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிய எண்ணிலிருந்து ஜெகதீஷிற்கு அழைப்பு வந்துள்ளது.
அந்த அழைப்பில் பேசிய பெண் ராங் கால் என்று கூறி செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து அதே பெண் ஜெகதீஷை சென்போனில் தொடர்பு கொண்டு, தனது பெயர் கிருத்திகா என்றும் பெங்களூருவில் கல்லூரியில் படித்து வந்ததாகவும், தனது அப்பா அம்மா இறந்து விட்டதால் தான் மட்டும் குன்னத்தூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி வாழ்ந்து வருவதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டு, அதன் பிறகு அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளார்.
மேலும், ஒரு நாள் இருவரும் நேரில் சந்திக்க வேண்டும் என்று சொல்லி வந்த கிருத்திகா, கடந்த மூன்றாம் தேதி தனது பாட்டி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்று விட்டார். அதனால் வீட்டில் தான் மட்டும் தனியாக இருப்பதாகவும் குன்னத்தூருக்கு நேரில் வந்தால் சந்திக்கலாம் என ஆசைவார்த்தை கூறி அழைத்து ஜெகதீஷிற்கு வலை வீசியுள்ளார்.
இதையடுத்து ஜெகதீஷ் கடந்த ஜூன் மூன்றாம் தேதி மாலை குன்னத்தூர் வந்துள்ளார். அவரை, கிருத்திகா தனது ஸ்கூட்டியில் குன்னத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்க்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்குள் சென்றதும் கதவை பூட்டியுள்ளார். அதன் பின்னர் திடீரென கதவை திறந்து நான்கு மர்ம கும்பல் உள்ளே வந்து இருவரையும் வீடியோ எடுத்துள்ளனர். தொடர்ந்து அந்த நான்கு பேரும், ஜெகதீஷிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் தர மறுத்தால் வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவோம் என்று மிரட்டி பேரம் பேசியுள்ளனர்.
இறுதியாக ஜெகதீசிடம் 2.10 லட்சம் ரூபாய் பணத்தையும் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு, மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அதே ஸ்கூட்டியில் ஜெகதீஷை அழைத்து வந்து அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு, வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டிச் சென்றுள்ளனர். பயத்தில் வீட்டுக்குத் திரும்பிய ஜெகதீஷ், மறுநாள் பெருமாநல்லூர் காவல் நிலையத்துக்கு வந்து, நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார்.
புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த பெருமாநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜெகதீஷிடம் பணம் பறித்த பிறகு அனைவரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தப்பி ஓடி இருப்பதும், மர்ம கும்பலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லாதது போல கிருத்திகா நடித்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து செல்போன் சிக்னல்கள் மூலம் விசாரணை மேற்கொண்ட போலீசார், முதலாவதாக ஈரோடு மாவட்டம் அத்தியூர் அடுத்து புதுக்காடு பகுதியைச் சேர்ந்த ஆறான் மகன் பழனிச்சாமி (51), ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்த சேகர் மகள் கிருத்திகா (19) மற்றும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்து ஒட்டமலை பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் அருண்குமார் (33) ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஈரோடு அரசு கலைக் கல்லூரியில் பிஏ வரலாறு படித்த கிருத்திகாவை வைத்து, நகைக்கடை விளம்பர பலகையில் இருந்த செல்போன் எண் மூலமாக ஜெகதீஷை ராங் நம்பர் என்று கூறி தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி வலையில் விழ வைத்து மிரட்டி பணம் பறிக்க ஏழு பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டதும், அதற்கு குன்னத்தூர் பகுதியில் உள்ள பழனிச்சாமியின் வீட்டை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
மேலும், ஒகேனக்கலை சேர்ந்த அருண்குமார் மீது ஏற்கனவே பாலக்கோடு, பெரும்பாலை, தருமபுரி மற்றும் மேச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் ஐந்து வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய சேலம் மாவட்டம் நிலவரப்பட்டி பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் நெல்சன் (41), வேலூர் மாவட்டம் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த முனிராஜ் மகன் நரேஷ் குமார் (39), வேலூர் மாவட்டம் பிளாட்பாரத்தில் வசித்து வரும் துரைசாமி மகன் சுரேஷ் குமார் (36) மற்றும் ஈரோடு மாவட்டம் இலவுமலை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து மகன் ராஜசேகர் (48) ஆகிய நான்கு பேரையும் பிடித்து வந்து, அவர்களிடமிருந்து 2.10 லட்சம் ரூபாய் பணமும் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கிருத்திகா உட்பட ஏழு பேர் கொண்ட மோசடி கும்பலை கைது செய்த பெருமாநல்லூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.