புகை பிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்ட இளைஞருக்கு அரிவாள் வெட்டு!
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சைமணி (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமயந்திரன் (வயது 30) என்பவரிடம் புகை பிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தமயந்திரன் அவருடைய நண்பர்களான தங்க பிரபாகரன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேரும் மது போதையில் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த பிச்சைமணியை அறிவாளால் வெட்டி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த பிச்சைமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.