புதுக்கோட்டை அருகே காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு... ஜல்லிக்கட்டில் நேர்ந்த சோகம்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நெய்வாசல் என்ற ஊர் உள்ளது. அந்த பகுதியில் அமைந்துள்ள திட்டானிக்கருப்பர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 170 காளை காளைகள் பங்கேற்றன.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்ட காளைளை வீரர்கள் அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றிப்பெற்ற காளைகளுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், காளையை அடக்க முயன்றபோது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்த அஜித் குமார் (24) என்ற இளைஞரை காளை முட்டியது.
இதில் படுகாயமடைந்த இளைஞரை சிகிச்சைக்காக காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.