அரசுப் பேருந்தில் படியேறி மேலே வரச் சொன்ன நடத்துநருக்கு அடி, உதை - இளைஞர் கைது!
சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில் இருந்து சேலம் விமான நிலையம் முதல் புதிய
பேருந்து நிலையம் வரை அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இன்று காலை விமான
நிலையத்தில் இருந்து ஓமலூர் பேருந்து நிலையம் வந்த அரசு பேருந்து சேலம்
பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.
அப்போது ஓமலூர் நேரு நகரை சேர்ந்த பிரபு என்ற வாலிபர், படியில் தொங்கியபடியே நின்று கொண்டிருந்தார். அவரை மேலே ஏறி உள்ளே
வருமாறு பேருந்து நடத்துநர் வெங்கடாஜலம் கூறியுள்ளார். அதற்கு நடத்துநரை ஆபாசமாக பேசி, அவரின் சட்டையைப் பிடித்து அடித்து, நெஞ்சின் மீது எட்டி உதைத்து தாக்கியுள்ளார் பிரபு.
இதில் காயமடைந்த நடத்துநர் வெங்கடாஜலம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் முன்னிலையில், ஆபாசமாக திட்டி நடத்துநரை தாக்கிய வாலிபர் பிரபுவை, சக பேருந்து பயணிகள் பிடித்து அடித்து, ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வாலிபரை கைது செய்த ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.