Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மலைக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் நீதிபதி ஸ்ரீபதி - முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

03:14 PM Feb 13, 2024 IST | Web Editor
Advertisement

சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றி தான் தமிழ்நாடு தரும் பதில் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள பழங்குடி கிராமமான புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி (23).  இவர் ஏலகிரி மலையில் கல்வி கற்று,  அதன் பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு இருந்தார்.  இடையில் அவருக்கு திருமணமான போதும்,  படிப்பைக் கைவிடாமல் தொடர்ந்து பட்டப்படிப்பை படித்து முடித்தார். தொடர்ந்து,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதி தேர்வில் பங்கேற்க முடிவு செய்து, அதற்காக தீவிரமாக படித்து வந்தார்.

இதனிடையே அவர் கர்ப்பம் தரித்திருந்த நிலையில், தேர்வு நடைபெறும் அன்றே அவருக்குக் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தேர்வுக்கு இரண்டு நாள் இருக்கும் போது, அவருக்கு குழந்தை பிறந்த. இதனால் அவர் தேர்வு எழுதுவது சிரமம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனாலும், பிற ஆண்களைப் போல் குழந்தை தான் முக்கியம் என்று முடிவெடுக்காமல், தன் மனைவியின் கனவை நிறைவேற்ற முடிவு செய்த ஸ்ரீபதியின் இணையர் வெங்கட்ராமன், ஸ்ரீபதியை தேர்வுக்காக அழைத்து சென்றார்.

இந்த தேர்வு நடைபெற்று முடிந்து தற்போது முடிவுகள் வெளியாகி உள்ளது.  அதில் ஸ்ரீபதி வெற்றி பெற்று, பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக விரைவில் 6 மாத பயிற்சிக்கு ஸ்ரீபதி செல்ல உள்ளார்.  அவருக்குப் பல்வேறு தரப்பினரும் தொடர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றி தான் தமிழ்நாடு தரும் பதில் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!

பெரிய வசதிகள் இல்லாத மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.  அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்.  அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!

Tags :
AchievementCivil JudgeCM MK StalinjudgetiruvannamalaiTribalwomen
Advertisement
Next Article