For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மகாராஷ்டிரா மலைப்பகுதியில் இரும்பு சங்கிலியால் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்! தமிழ்நாட்டில் கணவர் இருப்பதாக தகவல்!

03:51 PM Jul 29, 2024 IST | Web Editor
மகாராஷ்டிரா மலைப்பகுதியில் இரும்பு சங்கிலியால் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்  தமிழ்நாட்டில் கணவர் இருப்பதாக தகவல்
Advertisement

மகாராஷ்டிரா மலைப்பகுதியில் இரும்பு சங்கிலியால் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது. 

Advertisement

சிந்துதுர்க் மாவட்டத்தின் சாவந்த்வாடியில் உள்ள ரோனபால் சோனுர்லி (Ronapal Sonurli) கிராமத்தின் மையத்தில் கரடி மலை உள்ளது. இந்த மலைப்பாங்கான வனப் பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் மற்றும் விவசாயிகள் சிலர் கடந்த சனிக்கிழமை (27.07.2024) காலை கால்நடைகளை மேய்க்கச் சென்றுள்ளனர்.

அப்போது ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்த திசையில் அனைவரும் தேடி சென்றனர். அப்போது, ​​காட்டுக்குள் சிறிது தூரத்தில் ஒரு பெண்ணின் கால்கள் மரத்தடியில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர். அந்த பெண்ணின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவரை பார்த்த விவசாயிகள் அச்சமடைந்தனர். உடனே அருகில் உள்ள கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை சுற்றி பரிசோதித்து, அவரின் காலில் பிணைத்திருந்த சங்கிலியை உடைத்து அவரை விடுவித்து, சிகிச்சை அளிக்க அழைத்துச் சென்றனர். மீட்கப்பட்ட சமயத்தில்​​ அந்த பெண்ணால் சரியாக பேச முடியவில்லை. போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து சவந்த்வாடியில் உள்ள அப்ஜிலா மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இன்று காலை (ஜூலை 28) அவர் மேல் சிகிச்சைக்காக ஓரோஸில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது பெண்ணின் உடலில் அதிக காயங்கள் இல்லை. ஆனால், பல நாட்களாக எதையும் சாப்பிடாமலும், குடிக்காமலும் இருந்ததால் அவர் மிகவும் பலவீனமாகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சில முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்த பெண்ணால் சரியாக பேச முடியாததால் அதிகாரிகளிடம் எழுதி காண்பிக்க, பேனா மற்றும் பேப்பரை கேட்டு தனக்கு நேர்ந்ததை எழுதினார்.தன்னை சங்கிலியால் கட்டிப்போட்டது தன் கணவர் தான் என்று அவர் எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளார். ஆனால் அவர் எதற்காக இதை செய்தார் என்பது பற்றி எந்த தகவலும் இன்னும் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை.

மீட்கப்பட்ட அந்த பெண் பேசும் நிலையில் இல்லாததால், என்ன நடந்தது என்று இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண் ஒரு காகிதத்தில் எழுதி தனக்கு நடந்ததை ஓரளவுக்கு கூறியுள்ளார். அதன்படி, அவருக்கு ஒருவித ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் தாடை பகுதியை அவரால் அசைக்க முடியவில்லை. அவரால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை.

40 நாட்களாக வனப்பகுதியில் உணவு, தண்ணீர் இல்லாமல் இந்த நிலையில் இருந்ததாக பேப்பரில் இந்த பெண் ஒரு கோரிக்கையை எழுதி வைத்துள்ளார். ஆனால் அவர் எப்படி இவ்வளவு நேரம் உணவும் தண்ணீரும் இல்லாமல் இருந்தார்? போன்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

அவர் இறுதியாக எழுதி காண்பித்தது, "என் கணவர் என்னை மரத்தில் கட்டிவைத்து விட்டு என் வாழ்க்கை இங்கே முடிந்துவிடும் என்று ஓடிவிட்டார். நான் பாதிக்கப்பட்ட பெண். தற்போது உயிர் பிழைத்திருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தீவிர விசாரணைக்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண் மீட்கப்பட்ட சமயத்தில் மனநிலை சரியில்லாத நிலையில் இருப்பது போன்று தெரிந்தது. ஆனால் இதுகுறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என காவல்துறை கண்காணிப்பாளர் சவுரப் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்த பெண் இதற்கு முன்பு டெல்லி, மும்பை, கோவா போன்ற இடங்களில் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றுள்ளார். அதற்கான ஆவணங்கள் அந்த பெண்ணிடம் இருந்துள்ளது. மேலும் தமிழ்நாடு முகவரியுடன் ஒரு ஆதார் கார்டு மற்றும் அமெரிக்க பாஸ்போர்ட் நகர் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதோடு, தனது கணவர் தமிழ்நாட்டில் இருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். அவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஒரு குழுவையும் தமிழ்நாட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் அவருடைய வார்த்தைகளில் முரண்பாடு இருக்கிறது. எனவே, போலீசார் அனுப்பியுள்ள குழுக்களின் விசாரணையில் உறுதியான விஷயம் தெரியவந்த பின்னரே தகவல்களை வழங்க முடியும் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Tags :
Advertisement