கோவையில் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண் - ஒப்பந்ததாரருக்கு அபராதம்!
கோவையில் கடந்த 2 நாட்களுக்கு பெண் ஒருவர் திறந்திருந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்று காந்திபுரம் 100 அடி சாலை. இந்த சாலையின் இரு புறங்களிலும் வணிக நிறுவனங்கள் உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே இரு புறங்களிலும் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டு, பிறகு ஆங்காங்கே இருந்த பாதாள சாக்கடை மூடிகள் திறந்தபடியே காணப்பட்டன.
இது குறித்து பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அவ்வழியே நடந்து சென்ற பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென குழிக்குள் விழுந்தார். இதனைத் தொடர்ந்து, கால் எலும்பில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.