பைக் மீது மாடு மோதி தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவி படுகாயம்... பதைபதைக்க வைக்கும் #CCTV காட்சி!
நெல்லையில் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த மாடு, திடீரென சாலையின் குறுக்கே ஓடியதால், அந்த வழியாக சென்ற பைக் மீது மோதி, அதில் சென்ற கல்லூரி மாணவி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
நெல்லை மாநகராட்சி 55வது வார்டுக்குட்பட்ட தியாகராஜர் நகர் பகுதியில், சாலையில்
திரியும் மாடுகள், வாகனங்கள் மீது எதிர்பாராத நேரத்தில் முட்டி மோதி விபத்து
ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில், தியாகராஜ நகர் அடுத்த திருமால் நகர் பகுதியை சேர்ந்த மாணவி சுவாதிகா, கல்லூரிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
தியாகராஜ நகர் 2வது நடுத்தெருவின் வழியாக வரும்போது, அங்கு சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த மாடுகளில் ஒன்று, எதிர்பாராத விதமாக திடீரென சாலையில் குறுக்கே ஓடியது. அப்போது அங்கு வந்த மாணவியின் ஸ்கூட்டியில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் மாணவி சுவாதிகா ஸ்கூட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டார். விபத்தில் படுகாயம் அடைந்த மாணவி சுவாதிகா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சாலையில் சுற்றித் திரியும் திரியும் மாடுகளால், பலமுறை விபத்துகள் ஏற்பட்டு அதனால் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இனிமேலாவது சாலையில் திரியும் மாடுகளை மீட்டு, உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தியாகராஜர் பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.