காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே லாரியை வழிமறித்த காட்டு யானை!
காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே லாரியை வழி மறித்து லாரியில் இருந்த கரும்புகளை ருசித்து தின்ற காட்டு யானையால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி
என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த நிலையில் லாரி ஒன்று கரும்புகளை ஏற்றிக் கொண்டு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து, சத்தியமங்கலம் அருகே தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி
அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கரும்பு லாரியை வழிமறித்தது.
யானையைக் கண்டதும் அச்சமடைந்த லாரி ஓட்டுநர், லாரியை அப்படியே நடுரோட்டில் நிறுத்தினார். பின்னர் அந்த காட்டு யானை லாரியில் இருந்த கரும்புகளை ஒவ்வொன்றாக எடுத்து தின்றது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது