For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

03:51 PM Jan 26, 2025 IST | Web Editor
“வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்”   எடப்பாடி பழனிசாமி
Advertisement

“கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில், உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியும், நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டும் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

Advertisement

“சுவிட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் 2025-ம் ஆண்டுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் உலக அளவிலான வணிக நிறுவனங்களின் தலைவர்களும், அரசு துறையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதில் உலக அளவில் பொருளாதார நிலை, வணிக மாற்றங்கள், மாறி வரும் தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றியெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களும் கலந்துகொண்டுள்ளன. தமிழ் நாட்டின் சார்பில் திமுக அரசின் தொழில் துறை அமைச்சர் T.R.B. ராஜாவும் கலந்துகொண்டிருக்கிறார். பத்திரிக்கை செய்திகளில் மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற பல்வேறு மாநிலங்கள் பெருமளவு முதலீட்டை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்திட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

தமிழ் நாட்டைச் சேர்ந்த தொழில் துறை அமைச்சரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். ஆனால், தமிழ் நாட்டிற்கு எவ்வளவு முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. பிற மாநிலங்கள் எல்லாம் தீவிர முயற்சி மேற்கொண்டு இந்த கூட்டத்திலும் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழ் நாட்டின் சார்பாக இதில் கலந்துகொண்ட அமைச்சர் எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

இதிலிருந்து திமுக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது போல், தமிழகத்திற்கு பலரும் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து வருவதாக கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. உண்மையான முதலீட்டாளர்கள் தமிழ் நாட்டை நாடி வருவதாகவும் தெரியவில்லை.

எங்கள் ஆட்சியில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்த்த முதலீடு எவ்வளவு என்று கூப்பாடு போட்டு வெள்ளை அறிக்கை கேட்ட ஸ்டாலின், கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில், உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியும், நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டும் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு என்றும், தற்போது, டாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பெறப்பட்ட முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு ? உண்மையில் இதுவரை பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பது பற்றியும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இதுவரை அதுபற்றிய நிறுவனங்கள் வாரியான விவரங்களை வெளியிட தயக்கம் காட்டுவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags :
Advertisement