இமாச்சலப்பிரதேச நதியில் சுற்றுலா பயணி ஆபத்தான முறையில் காரை ஓட்டிய விவகாரம் | காவல்துறை அதிரடி நடவடிக்கை!
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சந்திரா நதியில் சுற்றுலா பயணி ஒருவர் ஆபத்தான முறையில் 'தார்' காரை ஓட்டிச்சென்ற வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவின் மலைப் பிரதேசமான இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு அதிக அளவிலான மக்கள் சுற்றுலா செல்வது வழக்கம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இமாச்சலப்பிரதேசத்திற்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக, அங்குள்ள முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது.
இந்நிலையில் சுற்றுலா பயணி ஒருவர் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அந்த மாநிலத்தின் லஹால் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள சந்திரா நதியில் தனது 'தார்' காரை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த நபர் ஆபத்தான வகையில் காரை இயக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டது.
இதனையடுத்து, இமாச்சலப்பிரதேச காவல்துறையினர் ஆபத்தான வகையில் காரை இயக்கிய சுற்றுலா பயணி மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாயங் சௌத்ரி கூறியதாவது:
“சமீபத்தில், லஹால் & ஸ்பிதி மாவட்டத்தின் சந்திரா நதியில் சுற்றுலா பயணி ஒருவர் காரில் பயணம் செய்த வீடியோ வைரலானது. மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் கீழ், அந்த வாகனத்தை இயக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆபத்தான செயல்களை தடுக்கும் வகையில், மாவட்ட காவல்துறையினர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்”.
இவ்வாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.