2ம் வகுப்பு மாணவனை கதவில் கட்டி வைத்து தாக்கிய ஆசிரியர்... #Odisha-வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ஒடிசாவில் ஆசிரியர் ஒருவர் 2ம் வகுப்பு மாணவனை கதவில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் கேந்திரப்பாரா மாவட்டத்தில் மார்ஷாகாய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் ஆங்கில வழி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் இருந்த மாணவர்களில் ஒரு மாணவன் (வயது 7) விளையாடி கொண்டிருந்தான். இது வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியருக்கு இடையூறாக இருந்தது.
அந்த ஒரு மாணவனால் மற்ற மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக எண்ணிய ஆசிரியர் கடும் கோபமடைந்தார். இதனையடுத்து, வகுப்பறையில் விளையாடிக்கொண்டிருந்த அந்த 7 வயது மாணவனை தரதரவென இழுத்து சென்ற ஆசிரியர் அந்த பள்ளியின் நுழைவு வாசலில் இருந்த கதவில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். அவருடன் மற்ற ஆசிரியர்களும் சேர்ந்து சிறுவனை அடித்துள்ளனர்.

இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் கடந்த நவம்பர் 25ம் தேதி நடந்திருந்தாலும், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமீபத்திலேயே வெளிவந்தன. இதன்மூலம் இச்சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 7 வயது மாணவனை கதவில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆசிரியருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.