திருவாரூரில் திடீரென கேட்ட வெடிச்சத்தம்... வீடுகள் அதிர்ந்ததால் பொதுமக்கள் பீதி!
திருவாரூரில் இன்று காலை திடீரென கேட்ட வெடிச் சத்தத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
திருவாரூரில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால்
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருப்போர் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறி
சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த வெடி சத்தமானது திருவாரூர் மட்டுமல்லாமல்
கொரடாச்சேரி, கண்கொடுத்தவணிதம், பூந்தோட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டது.
மேலும் அருகே உள்ள மாவட்டங்களான காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்திலும் இந்த வெடி சத்தம் கேட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த சத்தத்தை கேட்டு வீட்டில் இருக்கும் முதியோர்கள், கர்ப்பிணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் கட்டிடம் இடிந்து விட்டதாக எண்ணி பேரதிர்ச்சி அடைந்தனர். இதனால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒருவித பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இது குறித்து விசாரித்தபோது தஞ்சாவூர் - கோடியக்கரை வான்வெளியில் சென்ற ஜெட் விமானத்திலிருந்து ஏர் ரிலீஸ் செய்யும் போது ஏற்பட்ட சத்தம் தான் என திருவாரூர் மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று காலை முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்து சில நிமிடங்கள் கழித்து சகஜ நிலைக்கு திரும்பி மீண்டும் தேர்வு எழுத தொடங்கினர்.