For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அன்று கான்ஸ்டபிள்...இன்று ஆன்மீக குரு.... யார் இந்த போலே பாபா?

09:55 AM Jul 03, 2024 IST | Web Editor
அன்று கான்ஸ்டபிள்   இன்று ஆன்மீக குரு     யார் இந்த போலே பாபா
Advertisement

உத்தரப்பிரதேச சம்பவத்துக்கு காரணமான போலே பாபா, யார் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 2) நடந்த ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதோடு பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  முதற்கட்டமாக 27 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவர்கள் கலந்துகொண்ட மத வழிபாட்டுக் கூட்டத்தை நடத்தியவர் சத்சங் நாராயண் சாகர் விஷ்வ ஹரிபோலே பாபா. இவரது இயற்பெயர்சூரஜ் பால். ஹாத்ரஸுக்கு அருகிலுள்ள காஸ்கன்ச் மாவட்டத்தின் பட்யாலி கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 18 வருடங்களுக்கு முன் உ.பி.யின் காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர்.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல்வேறு வகையான துறவிகளை பார்த்த இவருக்கு, அதன் மேல் ஆர்வம் வந்துள்ளது. தானும் அவர்கள் போல் மாறவேண்டும் என்ற எண்ணம் பிறந்துள்ளது. இதனால் அவர் கான்ஸ்டபிள் பணியிலிருந்த போதே சிறிய ஆன்மிகப் பிரச்சாரங்களை நடத்தியுள்ளார். இவர் மற்றவர்கள் போல் காவி நிற உடை அணியாமல், சாதாரண மனிதராக இருந்து பிரச்சாரம் செய்யவும் முடிவு செய்துள்ளார். பின்னர் இவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு,  தனது சொந்த கிராமமான பட்டியாலியில் ஆசிரமத்தை அமைத்துள்ளார்.

இதனையடுத்து கிராமவாசிகள் இவரை ‘போலே பாபா’ (அப்பாவி ஆன்மிகவாதி)’ என்று அழைத்தனர்.  இந்த பெயர் பின்னர் சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என மாறி விட்டது.  இவரது மனைவியும் மாதாஸ்ரீ எனும் பெயரில், இவருடன் மேடைகளில் அமர்ந்து பிரச்சாரங்கள் செய்து வந்துள்ளார்.  இவருக்கு குழந்தைகள் இல்லை.  இவருக்கு கிடைத்த ஆதரவினால், மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் ஆசிரமங்களை தொடங்கியுள்ளார்.  இவருக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதியில் உள்ள சீடர்கள் மூலம் கூட்டங்கள் நடத்திக் கொள்வதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.  இவருக்கு கிடைக்கும் நன்கொடை மற்றும் பரிசுப் பொருட்களை பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் பக்தர்களுக்கே இவர் வழங்கி வந்துள்ளார்.  இவரது கூட்டங்களில் வழக்கமாக பிரச்னைகள் ஏற்படாத காரணத்தினால், போலீசாரும் அதிகம் காணப்படாத நிலை இருந்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில், வெறும் 50 பேர் மட்டும் கலந்துக் கொள்வார்கள் எனக் கூறிவிட்டு, இவர் 50,000 பேர்களை கூட்டியுள்ளார். இருப்பினும் அவர் மீது பெரிய நடிவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலும் போலீசார் அதிகம் இருக்கவில்லை. இந்த கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியதை அடுத்து சுமார் 3 மணி நேரம் நடந்துள்ளது.

அங்கு கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளவர்கள் வெளியேற போதுமான வாசல் வசதி செய்யப்படாமல் இருந்துள்ளது.  இதில், ஒருவர் தடுக்கி விழ அவர் மீது அடுத்தடுத்து பலரும் விழுந்துள்ளனர்.  இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஆன்மிகக் கூட்ட அமைப்பாளர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன.

Tags :
Advertisement