போர்களின் கோர முகத்தை எடுத்துரைத்த புகைப்படங்கள் வரிசையில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்த புகைப்படம்...!
போர்களின் கோர முகத்தை எடுத்துரைத்து உலகை உலுக்கிய புகைப்படங்கள் வரிசையில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் போர்கள் குறித்த செய்திகள் நமது மனதை தினம் தினம் உலுக்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் அந்த போர் சூழலை அப்பட்டமாக முகத்தில் அறைந்தார் போல் சொல்லும் புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் நிகழ்வும் அவ்வப்போது நடப்பதும் உண்டு.
குறிப்பாக 51 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவும், சீனாவும் ஆதரித்த வடக்கு வியட்நாமுக்கும் அமெரிக்கா ஆதரித்த தெற்கு வியட்நாமுக்கும் இடையே நடைபெற்ற நீண்ட காலப் போரில், பல லட்சம் மக்களும் பல லட்சம் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இந்த போரின் கோர முகம் குறித்து உலக ஊடகங்கள் அனைத்தும் எவ்வளவோ எடுத்துரைத்த போதும் போரில் தொடர்புடைய வல்லரசு நாடுகள் செவி சாய்க்காமல் இருந்தது. இந்த சூழலில் வியட்நாமிய அமெரிக்கரான ‘நிக் வுட்’ என்பவர் போர் நடந்து கொண்டிருந்த பகுதியில் இருந்து ஆடையின்றி உடல் முழுவதும் காயத்துடன் ஓடிவரும் 9 வயது சிறுமியான 'பான் தி கிம் ஃபூக்' - ஐ எடுத்த புகைப்படம் ஒட்டு மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. அதோடு, அச்சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றவும் செய்தார் புகைப்பட கலைஞர் நிக் வுட்.
இதே போன்று, உள்நாட்டு போர் காரணமாக சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர். பல நேரங்களில் இந்த ஆபத்தான பயணங்கள் விபத்தில் முடிந்துவிடுகின்றன.
இப்படி, கடந்த 2015-ம் ஆண்டு சிரியா அகதிகள் சென்ற படகு ஒன்று துருக்கி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது ஆண் குழந்தையான அய்லான் குர்தி உள்பட 12 பேர் பலியாகினர்.
இப்படி தற்போதும் ஒரு புகைப்படம் வெளியாகி உலகெங்கும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்த புகைப்படம். நீண்ட காலமாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பிரச்னை நிலவி வரும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இரு தரப்பினர் இடையே போர் மூண்டது. அப்போதிலிருந்து உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக இதில் காஸா பகுதியில் உள்ள மக்கள் கொத்து கொத்தாக பலியாகினர்.