”ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்”- தவெக ஆதவ் அர்ஜுனா உச்சநீதிமன்றத்தில் மனு!
நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஆணவப் படுகொலைகள் நடந்து வருகிறது. மேலும் தமிழகத்திலும் அண்மையில் நடைபெற்ற நெல்லை ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலையானது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் ஆணப் படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி வருகின்றனர். அண்மையில் தீமுக கூட்டணி கட்சி களான விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இந்த நிலையில் ஆணவ படுகொலையை தடுக்கும் தனிச் சட்டத்தை இயற்றுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யதுள்ளார்.
அம்மனுவில், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளை தடுக்கவும் அது தொடர்பான வழக்குகளை விசாரிக்கவும் விரைந்து முடிக்கவும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி இருந்த நிலையில் அது முறையாக பின்பற்றப்படவில்லை. ஆகவே ஆணவக் கொலை என தனியாக ஒரு சட்டத்தை இயற்ற உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.