சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட தூய்மை பணியாளர்... 2 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த சுடலைமாடனுக்கு பதவி உயர்வு வழங்க பணம் கேட்டு, பேரூராட்சி தலைவரின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஆயிஷா கல்லாசி, சாதியைச் சொல்லி இழிவாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த தூய்மை பணியாளர் சுடலைமாடன் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தினால் தூத்துக்குடி மாவட்டம்
முழுவதும் தூய்மை பணியாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து தூய்மை பணியாளர் சுடலை மாடனை சாதியைச் சொல்லி இழிவாக பேசிய பேரூராட்சி தலைவரின் மாமியார் ஆயிஷா கல்லாசி மற்றும் செயல் அலுவலர் பாபு மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த திமுக பேரூராட்சி தலைவர் ஹீமைரா ரமீஷ் பாத்திமா மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பேரூராட்சி தலைவர் ஹீமைரா ரமீஷ் பாத்திமா மீது துறைரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி எம்.பி உறுதி அளித்தார். இந்தநிலையில் இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உறவினர்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தில்
குற்றவாளிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாக இருப்பதாகவும், அவரால்தான் பேரூராட்சி தலைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு தீண்டாமையால் உயிரிழந்த தூய்மை பணியாளர் சுடலைமாடன் மரணத்திற்கு உரிய நீதியை பெற்றுத்தந்திட வேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.