சிறுவனை ஆந்திராவிற்கு கடத்தி, கொலை செய்து, மூட்டைகட்டி வீசிய உறவுக்காரப் பெண் | கொடூர சம்பவம் நடந்தது எங்கே?
7 வயது சிறுவனை ஆந்திராவிற்கு கடத்திச் சென்று கொலை செய்து, மூட்டைகட்டி வீசிய உறவுக்காரப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நடந்தது எங்கே? சம்பவத்தின் பின்னணி என்ன? செய்தித் தொகுப்பில் காணலாம்...
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கத்தை அடுத்த பல்லேவாடா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்-இந்துமதி தம்பதியர். இருவரும் தனியார் நிறுவன ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது 7 வயது மகன் அனீஷ் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். டிசம்பர் 17 ஆம் தேதி வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அனீஷ் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. சிறுவன் காணாமல் போனதைத் தொடர்ந்து அவனது பெற்றோர் சிறுவனை பல இடங்களில் தேடியும் கிடைக்காமல், தங்கள் மகனை கண்டுபிடித்துத் தருமாறு பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சிறுவனை காணவில்லை என வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் பணத்திற்காக கடத்தப்பட்டாரா? சிறுவன் காணாமல் போனது எப்படி? உள்ளிட்ட பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் அந்த ஊரைச் சேர்ந்த சில நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சிறுவனின் உறவினரான ரேகா என்ற பெண், சிறுவன் அனீஷை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதை பார்த்ததாக அவர்கள் தெரிவித்தனர். அதனடிப்படையில் ரேகாவை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ரேகாவிடம் தங்களுக்கே உரிய பாணியில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரை திடுக்கிடச் செய்தது. சிறுவனின் பெற்றோரிடம் பணம் பறிக்க எண்ணியே வரதபாளையம் பகுதியைச் சேர்ந்த ராவணையா என்பவர் உதவியுடன், சிறுவனை ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். அப்போது சிறுவன் மிகவும் அழுது அடம்பிடித்ததால் எங்கே மாட்டிக்கொள்வோமோ என பயந்து, சிறுவனை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டி வீசியதாக ரேகா அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையே டிசம்பர் 18 ஆம் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள புஜ்ஜி நாயுடு கண்டிகை பகுதியில், சாலையோரம் ரத்தக்கறை படிந்த பிளாஸ்டிக் மூட்டையொன்று கிடப்படதாக புஜ்ஜி நாயுடு கண்டிகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அங்கு வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் மூட்டையை கைப்பற்றி பிரித்துப் பார்த்தபோது, சிறுவனின் உடல் இருந்தது கண்டறியப்பட்டது.
பின்னர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த புஜ்ஜி நாயுடு கண்டிகை போலீசார், கொலை செய்யப்பட்ட சிறுவன் யார்? அவரை கொலை செய்தது யார் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் ரேகா அளித்த வாக்குமூலத்தின் பேரில் ஆந்திர போலீசாரை தொடர்புகொண்ட பாதிரிவேடு போலீசாருக்கு, சிறுவனின் உடல் கண்டறியப்பட்ட தகவல் தெரியவந்தது. அதனடிப்படையில் ஆந்திர மாநிலம் சென்ற போலீசார் ஆந்திர போலீசார் உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டுக்கொண்டு வந்து உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் ரேகாவை கைது செய்த பாதிரிவேடு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ராவணையா என்பவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். சிறுவன் உண்மையிலேயே பணத்திற்காகத்தான் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தலைமறைவாக உள்ள ராவணையாவை பிடித்தாலே தெரியவரும் எனவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன் அனீஷ் கொலை செய்யப்பட்டது ஆந்திர மாநில எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், புஜ்ஜி நாயுடு கண்டிகை போலீசார் பதிவு செய்துள்ள கொலை வழக்கிலும் ரேகா விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.