குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிய மாணவி - 11ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தல்!
ஆந்திராவில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து, தனது கல்வியைத் தொடர்ந்த மாணவி 11 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம், அதோனி மண்டலத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் மாணவி நிர்மலா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 537 மதிப்பெண்கள் பெற்று நிர்மலா தேர்ச்சி பெற்றுள்ளார். இதனை அடுத்து தனது மேல்படிப்பை தொடர நினைத்த நிர்மலாவுக்கு, அவரது பெற்றோர் வறுமையின் காரணமாக அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
பெற்றோரின் இந்த முடிவு நிர்மலாவுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று நினைத்த நிர்மலா, தனது கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ. சாய்பிரசாத் ரெட்டியிடம் தனது நிலையை எடுத்துக் கூறியுள்ளார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ. சாய்பிரசாத் ரெட்டி நிர்மலா பற்றி தெரிவிக்க, அவரது திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், ஆஸ்பரியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் நிர்மலாவை சேர்த்து, அவர் உயர்கல்வி படிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 11-ம் வகுப்பை முடித்துள்ள நிர்மலா, இறுதித் தேர்வில் 440 மதிப்பெண்களுக்கு 421 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.இதுகுறித்து நிர்மலா அளித்த பேட்டியில், “நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் எனது கனவு. நான் காவல்துறை அதிகாரியாகி குழந்தை திருமணங்களை ஒழிக்க பாடுபடுவேன். மேலும், என்னை போன்ற பெண்களின் கனவு நனவாக வேண்டும் என்பதுதான் எனது கனவு” என்று தெரிவித்துள்ளார்.