"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை வடலூர் பார்வதிபுரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். அப்போது பள்ளி குழந்தைகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் உள்ளிட்டோர் அமர்ந்து காலை உணவு உண்டனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கடலூர் மாவட்டத்தில் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் மூலம் நகர்புறங்களில் உள்ள 64 பள்ளிகளில் 6,711 மாணவ மாணவிகள் பயன்படுகின்றனர். இது தேர்தல் அறிக்கையில் கூறப்படாத திட்டம். இது போன்ற பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுவது அரசியல் செய்வதற்காக தவறான கருத்துக்களை கூறி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி பொய் மூட்டை பழனிச்சாமியாக மாறிவிட்டார். கொரோனா காலத்தில் மக்களிடம் செல்லாதவர்கள் இப்பொழுது பல்வேறு பெயர்களில் பயணங்கள் மேற்கொண்டு மக்களை ஏமாற்றுவதற்காக செல்கின்றனர். தடையில்லாமல் ஆம்புலன்ஸ் செல்ல வேண்டும் என்ற பொது விதி உள்ளது.
பதினைந்து நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். ஆம்புலன்ஸை தடுத்தால் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சென்றால் வழி விட வேண்டும் என்பது ஜனநாயக பண்பு. அதையும் மீறி தடுக்கிறார்கள். அதிகாரம் இல்லாத போதே இப்படி செய்கிறார்கள் என்றால் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்வார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று தெரிவித்தார்.