கண் பிரச்சனைகள் போக்கும் பரிகாரத் தலம் - ஆயிரகணக்கான பக்தர்கள் வழிபாடு
விக்கிரவாண்டி அருகேயுள்ள இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த பனங்காட்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற குடமுழக்கு விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இறைவனையும், இறைவியையும் சூரியன் ஏழுநாட்கள் ஒருசேர வழிபடும் சிறப்பு தலமும், கண் பிரச்சனைகள் போக்கும் பரிகாரத் தலம் என பல்வேறு சிறப்பு கொண்டதாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருத்தலம் திகழ்கிறது.
தேவாரப் பாடல்பெற்ற 20 வது நடுநாட்டுத் தலம், தக்கன் பேறு பெற்ற ஆலயம், சிபி சக்கரவர்த்தி முக்தி பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தக்கன் வழிப்பட்டதற்கு சான்றாக ராஜகோபுரம் உள்ளே வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தக்கன் வழிபடும் சிலை புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.
முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தை சார்ந்த இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்தலத்தில் தக்கனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரியன், வீரபத்திரரால் தாக்கப்பட்டு, பற்களையும், தன் பலத்தையும் இழந்தான். அந்த சாபம் நீங்கி பழைய நிலையை அடைய, இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றான் என்கிறது தலபுராணம். இதனை உறுதிப் படுத்தும் வகையில், இத்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரையில், ஏழு நாட்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து இந்த நாட்களில் இறைவனின் மீது சூரியன் ஒளி விழுவது கண்கொள்ளாக் காட்சி. சூரியன் வழிபட்ட தலம் என்பதால், சூரியக் கதிர் விழும் வகையில் இந்த ஆலயத்தின் கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருப்பது, முன்னோர்களின் புத்திக்கூர்மைக்கும், ஆற்றலுக்கும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
இக்கோவிலுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பாக கோவிலுக்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை,தனபூஜை,கணபதி பூஜை, நவகிரக ஹோமம் நடைபெற்றது இன்று காலை நான்காம் கால யாக சாலையில் பூஜைகள் செய்யப்பட்டு மஹா பூர்ணாஹீதி செய்யப்பட கலசம் கொண்டுவரப்பட்டு ராஜ கோபுரத்தில் தீபம் காண்பிக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது. பழமை வாய்ந்த கோவில் என்பதால் ஆயிரகணக்கான பக்தர்கள் குடமுழக்கு விழாவில் பங்கேற்று புனித நீரை பெற்று சென்று சிவனை வழிபட்டனர்.