மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் - 5 வாகனங்கள் சேதம்!
மதுபோதையில் காரை இயக்கி அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து, விபத்து ஏற்படுத்திய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஸ். இவர் நேற்று இரவு மது குடித்துவிட்டு வேளாங்கண்ணி பகுதியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு தனது காரில் சென்றுள்ளார். மதுபோதையில் இருந்த அவர் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் உள்ள சி. டி. சி டிப்போ பகுதியில் வந்தபோது இருசக்கர வாகனத்தின் மீது உரசியபடி சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையில் விழுந்து காயமடைந்தனர்.
இதையும் படியுங்கள் : “இலங்கையைக் கண்டிக்கவோ, சீனாவை எதிர்க்கவோ துணிச்சல் இல்லாத பிரதமர் கச்சத்தீவைப் பற்றி பேசலாமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
இதையடுத்து, அபிராமி தியேட்டர் பகுதியில் நான்கு இருசக்கர வாகனங்கள் மீது மதுபோதையில் காரை இயக்கி வந்த ரூபேஸ், அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் சிலர் லேசான காயமடைந்தனர். அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ரூபேஸை அப்பகுதி பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, விபத்து குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்தனர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய ரூபேஸிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.