மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும்..! - அமைச்சர் முத்துசாமி பேட்டி
மழை வெள்ளத்தால் சென்னை பாதிக்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாநகராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி உணவுப் பொருட்களை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா சமக தலைவர் சரத்குமார்?
புயல் இல்லாமல் மழை மட்டும் பெய்து இருந்தால், அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக எந்த இடத்திலும் தண்ணீர் தேங்கி இருக்காது. எவ்வளவு விரைவாக அகற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றி வருகிறோம். வரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களுக்கு பாதுகாப்பை அளிக்கும்” என்று கூறினார்.