குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி!
குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள சுரக்புரா கிராமத்தில் விவசாயத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு போர்வெல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. போர்வெல் பணி முடிந்ததை அடுத்து போர்வெல் குழாயை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று போர்வெல் அருகிலுள்ள வெள்ளரி தோட்டத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக ஒன்றவை வயது குழந்தை ஆர்வி ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்துள்ளார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் அறிந்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் கேமரா ஒன்றை ஆழ்துளையில் செலுத்தி குழந்தை இருப்பதை உறுதி செய்து, குழந்தைக்கு ஆக்ஸிஜன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் குழந்தையை காப்பாற்றுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து, ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதியின் அருகிலேயே மற்றொரு குழியை தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 50 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், குழந்தை 45 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது.
15 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆழ்த்துளை கிணற்றில் இருந்து குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.