For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் - ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு!

10:56 AM Feb 20, 2024 IST | Web Editor
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம்   ரூ 206 கோடி நிதி ஒதுக்கீடு
Advertisement

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டம் 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.

தொடர்ந்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (பிப். 19) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

இந்நிலையில் இன்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 20) காலை 10 மணிக்கு கூடியது. இந்த பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியதாவது,

“மண்வளத்தை பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திடவும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டம் 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும். ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து மண்ணின் வளம் காக்க 6 கோடியே 27 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.வேம்பினை பரவலாக்கம் செய்திடும் வகையில், 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வேளாண்காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகம் செய்யப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்கப்பட்டு இதர விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

2024-25-ம் ஆண்டில் 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் தேனீ முனையம் உருவாக்கப்படும். 10 உழவர் அங்காடிகள் 5 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2482 கிராம ஊராட்சிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் 15 ஆயிரத்து 280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
Advertisement