‘டிஜிட்டல் கைது’ எனக்கூறி மோசடியில் ஈடுபடும் மர்ம கும்பல்.. டாக்டரை மிரட்டி ரூ.59 லட்சம் கொள்ளை!
நொய்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவரை ஆபாச வீடியோ அனுப்பிய குற்றத்துக்காக டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என மிரட்டி மர்ம கும்பல் ரூ.59 லட்சம் பணம் பறித்துள்ளது.
நாட்டில் குற்றங்களை தடுக்க அரசுகள் எவ்வளவு முயற்சித்து வந்தாலும், குற்றங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. வழிப்பறி, கொள்ளை, கொலை இவற்றை தாண்டி தற்போது டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்துள்ளது. நொய்டாவைச் சேர்ந்த பூஜா கோயல் என்ற 40 வயது மகப்பேறு பெண் மருத்துவருக்கு கடந்த 13ம் தேதி செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் எதிரில் இருந்த நபர் தான் ட்ராய் அதிகாரி (இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை குழுமம்) பேசுகிறேன் என்று தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் “உங்கள் செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளன” எனக்கூறியுள்ளார். அதற்கு பூஜா மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பூஜாவை வீடியோ காலில் அழைத்து அந்த நபர் பிளாக்மெயில் செய்துள்ளார். உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம். நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால், பணம் வேண்டும் என மிரட்டியுள்ளனர். 2 நாட்கள் இவ்வாறு போன் செய்து பயமுறுத்தியுள்ளனர். தொடர் மிரட்டல்கள் வந்த நிலையில் பூஜாவும் மர்ம நபர் சொன்ன வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளாக ரூ.59 லட்சம் பணம் அனுப்பியுள்ளார்.
அதன்பிறகு இது மோசடி என்பதை உணர்ந்த பூஜா, கடந்த 22ம் தேதி நொய்டா சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் உதவி ஆணையர் விவேக் ரஞ்சன் ராய், "பூஜா பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம்." என்று கூறியுள்ளார்.
சமீபகாலமாக 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்கிற நூதன மோசடி அதிகரித்து வருகிறது. மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதற்காக மோசடியாளர்கள் இந்த முறையை அதிகம் கையாள்கின்றனர். மேலும் அவர்களை நம்ப வைக்க வீடியோ காலில் வந்து அரசு அலுவலகம், சீருடை போன்ற தோற்றத்தை செட் செய்து மிரட்டுகிறார்கள். இதேபோல டெல்லியைச் சேர்ந்த 72 வயது பெண்ணிடம், உங்கள் செல்போன் கிரிமினல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மிரட்டி ரூ.82 லட்சம் பறித்துள்ளனர்.
இதுதொடர்பாக நொய்டா காவல்துறை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த சில மாதங்களில் இப்படி 10க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. அந்த மோசடிகள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். பொதுமக்களுக்கு இதுபோல சட்டரீதியான விவகாரங்களை சொல்லி மிரட்டி பணம் கேட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திலோ அல்லது சைபர் கிரைமிலோ புகாரளிக்க வேண்டும்." என்று கூறியுள்ளனர்.