மணிப்பூர் நிலவரம் குறித்து அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!
மணிப்பூர் மாநிலத்தின் நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக மாறியது. இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி நடந்திருந்தாலும், இது தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் ஜூலை மாதம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல கலவரங்கள் தொடர்ந்து வெடித்து கொண்டே இருந்த நிலையில் பலரும் பிரதமர் மோடியை மணிப்பூரை வந்து பார்வையிட வலியுறுத்தினர். ஆனால் மோடி செல்லவில்லை.
இதற்கு எதிர்க்கட்சிகள் பல விமர்சனங்களை முன்வைத்தன. இதனைத்தொடர்ந்து தேர்தலின் போதும் பாஜக மணிப்பூரில் பிரசாரம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தேர்தல் முடிவடைந்து மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்றார். இதனையடுத்து கடந்த வாரம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்,
“நாட்டின் எல்லா இடங்களிலும் சமூக ஒற்றுமை இல்லை. இது சரியானதல்ல. மணிப்பூர் இன்னும் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அங்கே உருவாக்கப்பட்ட துப்பாக்கி கலாச்சாரம் கடந்த ஒரு வருடமாக அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கிறது. மணிப்பூரை யார் கவனிக்கப் போகிறார்கள்? நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று” என தெரிவித்திருந்தார்.
மோகன் பகவத் கருத்துக்கு பிறகாவது மோடி மணிப்பூரை சென்று பார்வையிடுவாரா? என சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் மணிப்பூர் மாநில நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி, மணிப்பூர் டிஜிபி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.